தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் தேவைகளை நேரடியாக அறிந்து தீர்வு வழங்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த முகாம்கள் 15-ந் தேதிவரை நடைபெற உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகள் சார்பில் 43 வகையான சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. வார்டு வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அதிகாரிகள் நேரில் தெரிவித்து வருவதுடன், திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு தகவலை உடனுக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், முகாம்கள் நடைபெறும் இடங்களைப் பற்றிய அறிவிப்புகள், https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்தில் தினமும் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றன. தற்போதைய நிலையில், ஒரு நாள் முன்னதாக மட்டுமல்லாது, வாரந்தோறும் தேதி வாரியாக எந்தெந்த இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி தங்களுக்கான பகுதியில் எப்போது முகாம் நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.