உத்தரப் பிரதேச மாநிலம் பாக்நாத் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கண்டேரா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார், கடந்த ஆண்டு கர்ஹி கங்க்ரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அங்கிதா, அய்யூப் அகமது என்பவருடன் முன்னமே காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 22ஆம் தேதி, சன்னி குமார் ‘கன்வார் யாத்திரை’யின் ஒரு பகுதியாக ஹரித்வாருக்கு பைக்கில் புனித கங்கை நீர் கொண்டு வரச் சென்றார்.
அப்போது, கங்க்ரான் கிராமம் அருகே சாலையில் நான்கு பேர் சன்னியின் பைக்கை வழிமறித்து அவரை தாக்கினர். பின்னர், சன்னியை அங்கிதாவின் பெற்றோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரிடம் கேவலமாக நடந்து கொண்டதுடன், அவர்மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் சன்னி அருகிலுள்ள மக்களால் மீட்கப்பட்டு முதலில் மீரட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால், உடனடியாக டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சன்னி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து சன்னியின் தந்தை வேத்பால் அளித்த புகாரின் பேரில், சன்னியின் மனைவி அங்கிதா, அய்யூப், பேபி மற்றும் சுஷில் ஆகியோருக்கு எதிராக கொலை மற்றும் குற்றச்சாட்டு சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கிராமவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.