ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தை புதன்கிழமை அதிகாலை தாக்கிய 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், வடக்கு பசிபிக் கடலில் சுனாமி அலைகளை உருவாக்கியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகியிருக்கிறது.
சுனாமி எச்சரிக்கைகள் ரஷ்யா, ஜப்பான், ஹவாய் மற்றும் நியூசிலாந்து பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன. கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 119 கி.மீ. தொலைவில் நிலநடுக்க மையம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கம்சட்காவில் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட்டதாக ரஷ்ய அவசர காலத்துறை அமைச்சர் செர்ஜி லெபடேவ் உறுதிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து, ஜப்பானில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாப்பு காரணமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோனலுலு, ஹவாய் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன; மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஜப்பான் ஹொக்கைடோ பகுதியில் நெமுரோ நகரத்தில் 30 செ.மீ. உயரமுள்ள சுனாமி அலை தாக்கியது. நிலநடுக்கத்தால் கம்சட்கா மற்றும் அதனை ஒட்டிய ரஷ்ய பகுதிகளில் பாதிப்பு, சேதம், மக்கள் வெளியேற்றம் ஆகியவை தொடருகின்றன.