வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ''மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதும் டேபிள் வைத்து மீட்டிங் போட்டு, முதல்வர் ஸ்டாலின், நாடகம் போடுகிறார்'' என்று காரைக்குடி பிரசாரத்தில், போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காரைக்குடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு, வள்ளல் அழகப்பச் செட்டியார் என்றால் நாடே அறியும். அவருக்குச் சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தைக் கல்விக்காகக் கொடுத்தவர். அதனாலே அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், செட்டிநாடு என்று பெருமையோடு அழைக்கப்படும் காரைக்குடி, வணிகர்கள் நிறைந்த பகுதி என்றும், கட்டிடக் கலைக்கு சிறப்பு பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநகராட்சியிலும் நிறைய ஊழல்கள் நடந்துள்ளதாகவும், இங்கிருக்கும் மேயர் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை குறைந்த வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அவர் மேயர் பொறுப்புக்கு வந்ததே கொள்ளையடிக்கத்தான் என்றும், மேயர் தன்னிச்சையாக மாநகராட்சி தீர்மானம் இல்லாமலேயே 30 கோடி ரூபாய்க்கு வேலை ஒதுக்கியிருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் எந்த வரியும் உயர்த்த மாட்டேன் என்று அறிவித்துவிட்டு பின்னர் உயர்த்தி விட்டதாகவும், குப்பைக்கு வரி போட்டுள்ளதோடு, மின்கட்டணமும் மூன்றாண்டுகளில் 67% உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால், இப்போது தற்காலிக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் என்னை கிண்டலடித்துப் பேசுகிறார். நீங்களே பாருங்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு பில் கட்டினார்கள் என்பதையும் இப்போது எவ்வளவு கட்டுகிறார்கள் என்பதையும் காட்டுகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் எல்லாவற்றுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும், மாநகராட்சியில் ஆரம்பித்து ஊராட்சி வரை கொள்ளை அடிக்கிறார்கள், கொள்ளையடிப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்றும் பேசுயுள்ளார்.
மேலும், அவர் அங்கு பேசுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் என்று ஊர் ஊராக அரசு ஊழியரைப் பயன்படுத்தி நோட்டீஸ் கொடுக்குறார்கள். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை அவரே இதனை ஒப்புக்கொண்டதாகவும், 45 நாட்களில் தீர்வு காணலாம் என்கிறார். அதாவது ஆட்சி முடியும்போது தந்திரமாக மக்களை ஏமாற்றுகிறார் என்றும் 'தினமும் ஒரு அறிக்கை, திட்டம், அதுக்கு ஒரு பெயர் வைப்பார். அது மட்டும்தான் ஸ்டாலின் செய்வார் என்று கூறியுள்ளார்.
மேலும், ஸ்டாலினுக்கு உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது அங்கேயே டேபிள் வைத்து மீட்டிங் போடுகிறார். 18 நாள் வெளிநாடு போய் சைக்கிள் ஓட்டிய நேரத்தில் ஏன் அரசுப் பணியை கவனிக்கவில்லை..? என்றும் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதும் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். மக்கள் இதற்கு மயங்க மாட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டுக்குப் போய், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபரை அழைத்து அங்கு வைத்து ஒப்பந்தம் போடுறார். இப்படிப்பட்ட முதல்வர் நாட்டுக்குத் தேவையா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது, தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்குமா இல்லையா என்ற சூழல் நிலவுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேசியுள்ளார்.