நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!
WEBDUNIA TAMIL July 30, 2025 10:48 PM

Imaginary Pic

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள கம்சத்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி எழுந்துள்ளது. இதனால் வடகொரியா, தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் என பசிபிக் கடலில் உள்ள பல நாடுகளும், தீவுகளும் சுனாமி எச்சரிக்கையில் உள்ளன.

பசிபிக் பெருங்கடல் முழுக்க பயணிக்கும் இந்த சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளை தாக்குவதுடன், அதையும் கடந்து சென்று அமெரிக்காவின் அலாஸ்கா, சியாட்டில் தொடங்கி சான் பிரான்ஸிஸ்கோவின் கலிபொர்னியா, லாஸ் ஏஞ்சலஸ், சாண்டியாகோ வரை பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் அமெரிக்காவை சுனாமி அலைகள் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த நிலநடுக்கமும், சுனாமியும் இயற்கையாக ஏற்பட்டதா என சந்தேகம் எழுப்புகின்றனர் சில சதிகோட்பாட்டாளர்கள். ஏற்கனவே அமெரிக்கா - ரஷ்யா இடையே தகராறு இருந்து வரும் நிலையில், சமீபமாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ரஷ்யாவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்ட கம்சத்கா பகுதியானது ரஷ்யாவின் நீர்மூழ்கி தளம் அமைந்துள்ள இடம் என்றும், ரஷ்யா நடத்திய ரகசிய ஆழ்கடல் அணுகுண்டு சோதனையின் விளைவாக இந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும் பேசி வருகின்றனர்.

ஆனால் இவை எல்லாம் வெறும் கற்பனையான கோட்பாடுகள்தானே தவிர ஆதாரமற்றவை என்று பலரும் மறுத்துள்ளனர். ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அந்த பகுதி நிலத்தகடுகள் நகரும் பகுதிதான் என்றும், ஜப்பானை ஒட்டிய அந்த பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு பலமுறை நிலநடுக்கங்கள் பதிவாவது இயற்கைதான் என்றும், தற்போது சற்று பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தை பல நாடுகளின் நிலநடுக்க ஆய்வு மையங்களும் உணர்ந்துள்ள நிலையில் அது இயற்கையாக ஏற்பட்டது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.