கோயம்புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி வரி மற்றும் கல்வி நிதியை தராமல் வேண்டுமென்று இழுத்தடிக்கிறது. பாஜக உடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதாலும் மத்திய அரசின் சூழ்ச்சியின் காரணமாகவும் பாமகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாமக கட்சியிலும் அவர்களது குடும்பத்திலும் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களோடு ஓட்டுக்காக உறவு வைத்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சர்வாதிகாரப் போக்கின் காரணமாக தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டையும் ஆட்சி செய்யலாம் என பகல் கனவு காண்கிறது. மேலும் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும் காங்கிரஸ் துணையோடு மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்றார்.
மேலும் பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் ராமதாஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் இரண்டும் நான்தான் என அறிவித்துள்ளதோடு அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அரசியலில் வாரிசு கிடையாது என்பதால் யாரிடம் வேண்டுமானாலும் நான் கட்சியை ஒப்படைப்பேன் என்றும் கூறி வருகிறார். அதே நேரத்தில் அன்புமணி நான்தான் கட்சியின் தலைவர் என்று கூறுகிறார். இதனால் பாமக கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக தந்தை மகன் இருவரும் இணைய வேண்டும் என பாமகவினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.