தேனி மாவட்டம் ராஜதானியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 38) என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்–2 வகுப்பில் படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவர் மாணவிக்கு தொடர்ந்து அசிங்கமான முறையில் தொல்லை கொடுத்தது உறுதியாகியுள்ளது. இந்த தகவல்களை பெற்ற குழந்தைகள் நல மேற்பார்வையாளர் சந்திரா, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து, பிள்ளைகள் மீது பாலியல் குற்றச்செயல்கள் தடுக்கும் போக்சோச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறை, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.