சபரிமலை ஆடி நிறை புத்தரிசி பூஜை; மாலை நடை திறப்பு! Dhinasari Tamil %name%
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆடி நிறை புத்தரிசி பூஜை விழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
நாளை புதன்கிழமை காலை நெற்கதிர்கள் கொண்டு பூஜை செய்து சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் நிறைபு த்தரிசி பூஜை விழா விமர்சையாக நடைபெறும்.
கேரளாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஐதீக ஜடங்குகளில் ஒன்று நிறைபுத்தரிசி பூஜை வழிபாடாகும். ஆவணி மாதத்தில் இங்கு விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன்பு விளைந்த கதிர்களை பகவானுக்கு படைத்து பூஜை செய்வது நிறைபுத்தரிசி பூஜை சடங்கு.
இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும். இதற்கான நாள், திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் அரண்மனையில் நாள் குறிக்கப்பட்டு அதே நாளில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பகவானுக்கு நெற்கதிர் படைத்து நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடப்படும்.
இந்த விழா சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சபரிமலையில் நெற்பயிர் பயிரிடப்பட்டாலும் பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து நெற்கதிர்களை கொண்டு வந்து வழங்குகின்றனர்.
இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜை புதன்கிழமை ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, இன்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தை தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். ஐயனின் தவ அலங்காரம் களைந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இன்று சபரிமலை வந்த ஏராளமான பக்தர்கள் நெற்கதிர்களை அதிக அளவில் கொண்டு வந்தனர். நாளை காலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் 4:00 மணிக்கு நடை திறந்ததும் கணபதி ஹோமம் மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தி தொடர்ந்து காலை 5.30 முதல் 6.30குள் நெற்கதிர்களை சோபன மண்டபத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜிவரு பூஜை செய்து நிறைபுத்தரிசி பூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் பிற மாநில பக்தர்களும் சபரிமலைக்கு வந்துள்ளனர். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வழக்கமான பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும். இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை முடித்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஆடி நிறை புத்தரிசி பூஜை; மாலை நடை திறப்பு! News First Appeared in Dhinasari Tamil