தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது, பள்ளி தோழி டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், சுபாஷினியின் தம்பி சுர்ஜித் வெளியே அழைத்து திடீரென வாளால் தாக்கி கவினை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித்தை கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது “கொலைக்கு தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் முறையே ராஜபாளையம் மற்றும் மணிமுத்தாறு ஆயுதப்படை காவல் பட்டாளங்களில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமியின் உத்தரவின்பேரில் இருவரும் பணியிடை நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு மேலும் விரிவாக விசாரணை செய்யப்படவேண்டும் எனக் கருதி, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் அடிப்படையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்குபின், நெல்லை காவல் ஆணையர் கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள், சமூகத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் நீதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளன.