உத்தரபிரதேச மாநிலம் செயின் கபீர் நகர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணியாற்றும் இவர், லட்சுமி என்பவரை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதிக்கு தற்போது 7 வயதில் மகள் உள்ளார். ஆனால், சந்தோஷுக்கு ஏற்பட்ட குடிபழக்கம் காரணமாக, மனைவி லட்சுமிக்கு அடிக்கடி குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், வாழ்க்கையில் தொடர முடியாத நிலையில் வந்த லட்சுமி, தனது மகளுடன் தாயாரின் வீட்டில் தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தார்.
தனது கணவர் சந்தோஷிடமிருந்து நிரந்தரமாக விவாகரத்து பெற 2022ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த லட்சுமி, தொடர்ந்தும் வழக்கில் முன்னிலையாகிவந்தார். இன்று அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கறிஞருடன் லட்சுமியும், அவரது மகளும் நீதிமன்ற வளாகத்தில் வந்திருந்தனர். சந்தோஷும் அவ்விடத்தில் முன்னிலையாக வந்திருந்தார்.
விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென சந்தோஷ் தன்னுடன் மறைத்து வந்த கூரிய கத்தியால், மகளின் கண்முன்னே மனைவி லட்சுமியை முகம், வயிற்று உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தத் தொடங்கினார். சம்பவ இடத்தில் லட்சுமி ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார். இது கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியோடி பாதுகாப்புக்கு தஞ்சமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்த லட்சுமி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரை உயிருடன் காப்பாற்ற முடியாமல் மருத்தவர்கள் அறிவித்தனர். அதே சமயம் தப்பியோட முயன்ற சந்தோஷை பொதுமக்கள் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டு வளாகத்திலேயே விவாகரத்துக்காக வந்த மனைவியை, கணவன் கொன்ற சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.