மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 28 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து சு. வெங்கடேசன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் பேசுகையில், "பஹல்காம் தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவில் இருந்த நமது பிரதமர் பயணத்திட்டத்தை குறைத்துக்கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமுக்கோ, காஷ்மீருக்கோ செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.
மேலும், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது பிரதமர் அதை செய்யவில்லை. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என்ற நிலையில், 'கோவிலுக்கு வாருங்கள்' என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். பிரதமரை இப்போது தான் பார்க்கிறோம்," என்று மத்திய அரசை கண்டித்துப் பேசியிருந்தார்.
சு. வெங்கடேசனின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்று இரவே அவரது தொலைபேசிக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். "நீ எப்படி பிரதமரை விமர்சித்துப் பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. இனி தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்," என்று மிரட்டியதாகத் தெரிகிறது.
இந்த கொலை மிரட்டலுக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில்,
"பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கருத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் ஆயுதம் வன்முறை. மக்கள் பிரதிநிதியை அவரது கடமையைச் செய்ய விடாமல் அச்சுறுத்தும் இத்தகைய கோழைகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நண்பர் சு. வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
Edited by Siva