இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
WEBDUNIA TAMIL July 31, 2025 12:48 AM

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இந்த வெப்ப உயர்வு ஏற்படும்.

சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சமாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 முதல் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக, ஆகஸ்ட் 2 முதல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்று மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.