சமூக வலைதளங்களில், “உலகம் முழுவதும் நாளை 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும்; இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு” என பரவும் தகவல் குறித்து நாசா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையல்ல எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நகர்ந்து வந்து, சூரியனை முழுவதுமாக மறைக்கும் பொழுதே முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் சில நிமிடங்கள் சூரிய ஒளி பூமி மேல் விழாது. அதுவே சூரிய கிரகண நேரமாகும். எனினும், இது முழு இருள் அல்ல. மாலை நேரத்தில் காணப்படும் மங்கலான வெளிச்சம் போலவே இருக்கும். இது புவியின் முழுமையான இருளாக மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ம் தேதி நிகழ உள்ளது. ஆனால் இது ஒரு மிகச் சிறிய கிரகணமாகும். இதன் தாக்கம் குறைந்ததாக இருக்கும். ஆனால், 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் தான் இந்த நூற்றாண்டில் நடைபெறவுள்ள மிக நீண்ட கால கிரகணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
எந்தெந்த நாடுகளில் இது தெரியும்?
இந்த கிரகணத்தைக் காணக்கூடிய நாடுகள்: ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகள் தான். மற்ற நாடுகளில் இந்த கிரகணம் தெரிவதில்லை.
உலகம் முழுவதும் இருள் வராது – மாலை நேரத்தையொத்த மங்கலான வெளிச்சம் இருக்கும். மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை
இந்த வகை தகவல்களை மக்கள் பகிரும்போது அதனை சரிபார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது முக்கியம் எனவும், விஞ்ஞான விளக்கங்களை நம்ப வேண்டும் எனவும் நாசா வலியுறுத்தியுள்ளது.