தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவை பொருத்தவரை பாஜகவில் கொடுக்கப்படும் பொறுப்பில் இருந்து தனது வேலைகளை அமைதியாக செய்து முடித்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி அழகு பார்க்கும்.
தேர்தல் சூழலில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில தலைவரிடம் கேட்டறிந்து செயல்படுவேன்.
மேலும் பிரதமர் மோடி வழங்கி உள்ள பல்வேறு நல திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துக் கூறுவோம். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் பாஜகவினரை கொள்கை எதிரி எனக் கூறினாலும், அவர் எனக்கு தம்பி தான்.
அரசியல் ரீதியாக அவர் வேறு பக்கம் இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவா?ரா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
ஆனால் அவர் எனக்கு தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். அவரது கட்சியின் முக்கிய குறிக்கோள் திமுகவை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.
அதே கொள்கையுடன் செயல்பட்டு வரும் அதிமுக- பாஜக கூட்டணியுடன் ஒன்றாக ஒரே அணியில் கைகோர்த்து திமுகவை வீழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.