பிரிட்டனில் 30 வயது சீக்கிய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் ஜூலை 23ஆம் தேதி இரவு, குர்முக் சிங் (அல்லது ‘கேரி’) என்பவர் கும்பல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது. இவர் பிரிட்டன் குடிமகன் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் அமர்தீப் சிங் (27) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கேரி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 வயது இளைஞர் ஒருவர் மற்றும் 29, 30, 54 வயதுடைய மூன்று பெண்கள் அடங்குவர். இவர்களில் சிலர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரி மீது ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமா அல்லது கும்பல் தாக்குதலின் விளைவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் லண்டன் சீக்கிய சமுதாயத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் உள்ளவர்கள் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.