தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து மாவட்டங்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், பல்வேறு சான்றிதழ்கள் பெறும் பணிகளை விரைவுப்படுத்தி வழங்கும் வகையிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு செலவில் செய்யப்படும் ஒரு திட்டத்திற்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளது.
நாளை மற்றொரு திட்டமான “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டங்களுக்கு “உங்களுடன் முதல்வர்”, “நலம் காக்கும் முதல்வர்” என்று பெயர் மாற்றப்பட இருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K