இங்கிலாந்தின் ஈஸ்ட் லண்டனில் உள்ள வைட்சேப்பல் பகுதியில் அமைந்த செயின்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில், பாஸ்மதி அரிசி பைகள் தலா £9.50 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடையில் மக்கள் திரண்டு குவிந்ததால் கடை முழுக்க பரபரப்பான சூழல் உருவானது.
இந்த நெரிசலான காட்சிகள் பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் பலர் தங்களின் டிராலிகளில் நிறைய பைகளை அடுக்கி வைக்கும் காட்சிகள் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ முதலில் “UB1UB2 West London (Southall)” என்ற X (முன்னால் ட்விட்டர்) கணக்கில் பகிரப்பட்டது. இது இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த வீடியோவின் பின்னணி குறித்து விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.
சிலர், “சில பவுண்ட் குறைவாக கிடைத்ததற்காக இப்படி பரபரப்பாகக் குதிக்க வேண்டுமா?” என விமர்சிக்க, மற்றொருவர், “இதுபோன்ற நெரிசலைக் கட்டுப்படுத்த கடைகள் ஒரு பையை மட்டுமே அனுமதிக்க வேண்டும்,” என கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு குழுவினர் இதற்கும் ஆதரவு தெரிவித்து, “அரிசி போன்ற நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை ஒதுக்கி வைப்பது சாதாரணமானது.
பலர் ஒரு வருடத்துக்கு போதுமான அளவு அரிசியை வாங்கி வைத்திருப்பது வழக்கமே,” என தெரிவித்துள்ளனர். இதே போன்று கடந்த 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் Costco கடையில் சிக்கன் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை ஒத்த இந்த சம்பவம், சமூகத்தில் உணவுப் பொருட்களின் திடீர் விலை குறைப்பு எவ்வாறு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.