பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய முன்னாள் முதல்வரும், அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுக்கு புதிய கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், “கூட்டணி குறித்து எந்தவொரு மேடையிலும் கருத்து தெரிவிக்கக் கூடாது. இதை மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.
ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, தொடர் தோல்விகளால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. அதனை மீட்டெடுப்பதற்காகவே உரிமை மீட்பு குழு உருவாக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எம்ஜிஆர்-ஜெயலலிதா சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் குறைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கூட்டணி குறித்து கருத்து கூறக்கூடாது எனவும், தற்போது எடுக்கப்படும் எந்த கூட்டணி முடிவும் பரந்த ஆலோசனை மற்றும் நிலைமையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை மீறுவோர் மீது கட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் தவறான நடவடிக்கைகள் எனக் கருதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய என்னவென்றால், திமுக தலைவர் ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்தித்ததும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து நேரடியாக வலுவான நிலைபெற்று பேசியதும் மாநில அரசியலில் புதிய சர்ச்சைகளை கிளப்பி இருக்கின்றன. இதையடுத்து, தற்போது தனது ஆதரவாளர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஓபிஎஸ், தனது அடுத்த அரசியல் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்.