'உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா..' கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துபெற்ற ஹரிஷ் கல்யாண்..
Top Tamil News August 04, 2025 05:48 AM

3 தேசிய விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படக்குழுவினரை  கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.  

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் - எம்.எஸ்.பாஸ்கர்  நடிப்பில்  கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. வாடகை குடியிருப்பில் வாகனத்தை பார்க்கிங் செய்வது தொடர்பான ஒரு சிறிய பிரச்சனையை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 71வது தேசிய திரைப்பட விருதில் ‘பார்க்கிங்’ படம் 3 விருதுகளை வென்றுள்ளது.  சிறந்த தமிழ் படத்திற்கான விருது , எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது,  சிறந்த திரைக்கதைக்கான விருது என 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.  

இந்நிலையில் தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படக்குழுவினரை நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. 

‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.  


வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக. ” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஹரிஷ் கல்யாண், “விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது.  எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி கமல்ஹாசன் சார்.  Love you sir” என்று குறிப்பிட்டுள்ளார்.  
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.