அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்
WEBDUNIA TAMIL August 05, 2025 05:48 AM

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி தன்னுடைய தந்தை ராமதாசை எதிர்த்து தமிழகத்தில் நடைப்பயணம் செய்ய புறப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த நடைப்பயணத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்பிரகடனம் செய்திருக்கிறார்.

அவர் பேசுகிறபோது, நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?” என்று முழக்கமிட்டிருக்கிறார்.

அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்

அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலும், ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில், இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல், கவுண்டன்யாநதியில், ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பொன்னையாற்றில், பரமசாத்து-பொன்னை, குகையநல்லூர், பாம்பாற்றில், மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில், கரியகூடல், அகரம் ஆற்றில், கோவிந்தப்பாடி, மலட்டாற்றில், நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில், பெரியாங்குப்பம், கன்னாற்றில், சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.

இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனி மேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.