குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிசையில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது ராஜ்வீர் பூபத்பாய் சோலங்கி என்ற குழந்தையை, இரவு 1 மணியளவில் திடீரென குடிசைக்குள் நுழைந்த சிறுத்தை தூக்கிச் சென்றது. குழந்தை வீட்டிலிருந்தே 500 மீட்டர் தொலைவில் உள்ள மாம்பழ தோட்டத்தில் சடலமாகக் மீட்கப்பட்டது.
சிறுத்தை, குழந்தையின் கழுத்தில் கடித்து கொன்று உடலை தோட்டத்தில் வீசி விட்டு தப்பியது தெரியவந்துள்ளது. குழந்தையின் தந்தை சிறுத்தையை துரத்திச் சென்றாலும், எந்த பலனும் இல்லை. பின்னர் தோட்டத்தில் குழந்தையை கண்டுபிடித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார். சிறுத்தை கொடூரமாக தாக்கியதில், குழந்தையின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 35 ஆண்டுகளாக குடிசைகளில் வசித்து வரும் கிராம மக்கள், வனவிலங்குகள் அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது சிறுத்தையை பிடிக்க இரண்டு வெவ்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற மனித உயிர்களுக்கு நேரும் வனவிலங்குகளின் தாக்குதல்களை தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையின் இருப்பிடம் குறித்து கண்காணித்து வருவதாகவும், அதை விரைவில் பிடித்து பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக உனா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.