“குப்பைக்கு வரிபோட்ட ஒரே அரசு திமுக அரசு தான்! திமுக என்றாலே மோசடி, மோசடி என்றாலே திமுக”-ஈபிஎஸ்
Top Tamil News August 06, 2025 02:48 AM

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜம்புநதி கால்வாய் திட்டத்தை தொடங்கினோம். ஆனால் இந்த திமுக ஆட்சி அமைந்ததும், அந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், அந்தத் திட்டம் முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படும். குற்றாலம் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவோம். திருநெல்வேலியில் இருந்து தென்காசியை தனியே பிரித்து, தனி மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, தனி மாவட்டமாக்கினோம். ஆனால் இன்னும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்த அரசு திறக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திறந்து வைப்போம். அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அதிமுக ஆட்சியில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு மீண்டும் சிறப்பாக வழங்கப்படும். இலவச வேட்டிச் சேலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். தீபாவளி அன்று மகளிருக்கு சிறப்பான சேலை வழங்குவோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை கூறினால், நான் பொய்யாக பேசுகிறேன் என்கிறார்கள். அதனால் தான் இதுபோன்று நாங்களே அச்சடித்து, மக்களிடம் கேட்டு வருகிறோம். இப்படி சொன்னதை கூட செய்யாத திமுக அரசு தொடர வேண்டுமா?


சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா அமைப்போம் என்றார்கள், செய்தார்களா? தென்காசியில் சட்டக்கல்லூரி அமைப்பதாக சொன்னார்கள், செய்தார்களா? சிறப்பு பொருளாதார மண்டலமாக தென்காசியை உயர்த்துவோம் என சொன்னார்கள், செய்தார்களா? கொரோனா காலத்தில் கூட விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டு, ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபோது, அவர்களுக்கு ஆல் பாஸ் போட்ட அரசு அதிமுக அரசு. சொத்து வரி உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இன்று கடை வரி 150% உயர்த்தியுள்ளனர். வீட்டு வரி 100% உயர்த்தியுள்ளனர். குடிநீர் வரியை உயர்த்தியுள்ளனர். இன்றைக்கு குப்பைக்கும் கூட வரி போட்டுள்ளனர். குப்பைக்கு வரிபோட்ட ஒரே அரசு திமுக அரசு தான். திமுக என்றாலே மோசடி, மோசடி என்றாலே திமுக. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? தேர்தல் வருவதால், நாடகம் போடுகிறார்கள். விளம்பரத்துறைக்கு 4 மூத்த அதிகாரிகளை நியமித்து, திமுக அரசு என்ன செய்தது என்று பேட்டி தர சொல்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் என ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார். 46 பிரச்சனைகள் மக்கள் இருப்பதாக முதல்வரே சொல்கிறார். திமுக ஆட்சியே இன்னும் 7 மாதங்களில் முடிய உள்ள நிலையில், எப்படி அதை தீர்ப்பீர்கள்? 4 ஆண்டுகளாக என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள்? 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.