சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த இந்த சிலை பொதுமக்கள் அதிகமாக செல்லும் இடத்தில் அமைந்துள்ளது.
நேற்று அதிகாலையில் சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திமுகவினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, விசாரணைக்கு தனிப்படை அமைக்கப்பட்டது. அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு காரில் ஒரு முதியவர் பெயிண்ட் டப்பாவுடன் செல்லும் காட்சிகள் பதிவானதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர் சேலம் 5 ரோடு பகுதியைச் சேர்ந்த டாக்டர் விஸ்வநாதன் (வயது 77) ஆவார். இவர் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர் ஆவார். இவர் சமூகத்தில் ஏழைகள் பசி பட்டினியால் தவிப்பதும், மது குடித்து சீரழிவது போன்றவற்றை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் முன்னாள் முதல்வருக்காக இவ்வளவு பெரிய சிலை தேவைப்படுகிறதா என்ற கேள்வியால் மனம் நொந்து அப்படி செய்ததாக கூறியுள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், “கருணாநிதி சிலையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு வந்தது. நான் 5 லிட்டர் கருப்பு பெயிண்ட் வாங்கி தனியாக காரில் சென்று ஊற்றி வந்தேன். நாட்டில் மக்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதற்கெதிராக என்னால் முடிந்த ஒன்றைச் செய்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விஸ்வநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சிலை மீதான அவமதிப்பு சம்பவம் தொடர்பான இந்த விசாரணை தற்போது பரபரப்பாக தொடர்கிறது.