நகரங்களில் இயங்கி வரும் ஸ்விக்கி, சொமாட்டோ, ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், நாள்தோறும் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து, மக்களிடம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:- அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்கள் வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவி புரியும். மேலும் டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்" என்றும் தெரிவிக்கப்படுகிறது.