இராஜபாளையத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி 20 லட்சம் மதிப்பிலான நகைகளை பறித்த கர்நாடக மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கர்நாடகா மாநிலம் சிராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அத்துடன் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, லிவின் நம்பிக்கை அளித்ததோடு நேரில் இரு முறை சந்திதுள்ளார். அப்போது திருமணம் செய்துகொண்டு தனியாக வசிக்கவேண்டிய சூழல் வந்தால் பணம் தேவைப்படும், ஆகையால் உன் வீட்டில் இருந்து நகைகளை எடுத்துவந்துக்கொடு என ஆசை வார்த்தையாக கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு தனது திருமணத்திற்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற கல்லூரி மாணவி, மதுரையில் வைத்து அதை லிவினிடம் வழங்கியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட லிவின் தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். இதனிடையே வீட்டில் வைத்திருந்த பணம் நகைகள் மாயமானதை அறிந்த செந்தில் குமாரும், அவரது மனைவியும் மகளிடம் விசாரித்தபோது, அவர் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். அதேநேரம் மீண்டும் மாணவிக்கு ஃபோன் செய்த லிவின், மேலும் பணம் தேவைப்படுவதாகவும் அதனை தயார் செய்துகொடுக்கும்படியும் கூறியிருக்கிறார். இதனைக்கேட்ட பெற்றோர் மகள் ஏமார்ந்ததை உணர்ந்து, உடனடியாக இராஜாபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், பணம் கொடுப்பதாகக்கூறி லிவினை ஆவாரம்பட்டிக்கு வரவழைத்து அவரிடம் கல்லூரி மாணவி பணத்தை கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த போலீசார் லிவினை சுற்றி வளைத்தனர். இருப்பினும் போலீசாரிடம் இருந்து தப்பிய லிவின் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார். பின்னர் 5 பேர் கொண்ட குழு அமைத்து லிவினை தேடி வந்தனர். செல்ஃபோன் நம்பர் மூலம் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சிராஜ் பேட்டையில் இருப்பதை அறிந்து பின்னர் லிவினை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் தனது நண்பரின் மூலம் வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்திருப்பதாக அறிந்த போலீசார் 21 பவுன் தங்க நகைகளை மீட்டு, லிவினை அழைத்துக் கொண்டு இராஜபாளையம் திரும்பினர். தொடர்ந்து வேறு பெண்களையும் இதேபோல் ஏமாற்றி இருக்கிறாரா என லிவினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.