தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் புகைப்படத்துடன் ஜெயலலிதாவின் புகைப்படமும் உள்ளது போல் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைய போவதை மறைமுகமாக கூறுவதற்கே சுதீஷ் இவ்வாறு செய்துள்ளார் என பேசினர்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, செல்வி ஜெயலலிதா ஒரு சாதனை பெண், இரும்பு மனுசி. இன்று வரையில் அவரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
தமிழகத்தில் ஒரே ஒரு எம்ஜிஆர், ஒரே ஒரு ஜெயலலிதா தான். அவரைப் போன்று சிங்க பெண்ணாக நானும் இருப்பதாக தேமுதிக சுதீஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் பல சவால்களை எதிர்கொண்டவர் செல்வி ஜெயலலிதா அவர்தான் எனது ரோல் மாடல் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
இதற்கு முன் கேப்டன் விஜயகாந்த் எம்ஜிஆர் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கும் கூட்டணிக்கும் முடிச்சு போட வேண்டாம் இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.