அண்ணன் கொலைக்கு சாட்சி சொல்ல இருந்த தம்பி வெட்டிக் கொலை - சிவகாசியில் பரபரப்பு.!!
Seithipunal Tamil August 13, 2025 07:48 PM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி - முனீசுவரி. இந்தத் தம்பதியினர்களுக்கு வைரம், ஈசுவரபாண்டியன், கணேஷ்பாண்டியன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், வெள்ளைச்சாமி குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த கோகுல்குமார் என்பவரின் குடும்பத்துக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. 

இந்தது தகராறில் வெள்ளைச்சாமியின் மனைவி முனீசுவரி தாக்கப்பட்டதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து கோகுல்குமார் மற்றும் அவருடைய அண்ணன் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஈசுவரபாண்டியன் தனது நண்பருடன் நேருஜிநகர் பகுதியில் இரவு நேரத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோகுல்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து, ஈசுவரபாண்டியனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோகுல்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

இந்த கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, முனீசுவரி ஆகியோர் சாட்சியம் அளித்த நிலையில் அடுத்த விசாரணையின்போது, ஈசுவரபாண்டியனின் தம்பியான கணேஷ்பாண்டியன் சாட்சியம் அளிக்க இருந்ததார். இதற்கிடையே, கோகுல் குமார் தரப்பில் இருந்து இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கக்கூடாது என்று வெள்ளைச்சாமி குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கணேஷ்பாண்டியன் நேற்று முன்தினம் காலை சொந்த வேலையாக தேனிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் கணேஷ் பாண்டியன் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கோகுல்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து கணேஷ்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதைப்பார்த்ததும் கணேஷ் பாண்டியனின் நண்பர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணேஷ்பாண்டியனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான கோகுல்குமார் உள்பட அவர்களது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.