லட்சக்கணக்கில் வருமானம்… வங்கி வேலையை விட்டு உணவுத் தொழிலில் சாதித்த தஞ்சாவூர் பெண்
TV9 Tamil News August 11, 2025 09:48 PM

நம் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதராண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் பெரிதாக முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.  ஆனால் அதில் உள்ள ரிஸ்க் காரணமாக தயங்குவோம். ஆனால் ஒரு சிலர் துணிச்சலாக இறங்கி வெற்றிபெற்றிருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் கோகிலா கண்ணா. தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டம் புதூர் கிரமாத்தை சேர்ந்த கோகிலா, வங்கி (Bank)ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்திருக்கிறார். வங்கியில் மேலாளர் என்பது சாதாரண பணி அல்ல. அந்த வேலையை விடுவது அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. ஆனால் தனது தொழில் கனவு காரணமாக வேலையை உதறிய அவர் தற்போது தற்போது லட்சக்கணக்கில் மாத வருமானம் ஈட்டுகிறார். தற்போது அவரது நிறுவனத்தில் 15க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைபார்த்து வருகின்றனர். அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை. அவரது வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம்.

தஞ்சாவூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் கோகிலா. தற்போது சிறந்த தொழில் முனைவோராக வேண்டும் என்ற கனவின் காரணமாக தான் பார்த்து வந்த வங்கி மேலாளர் வேலையை விடுகிறார். அவருக்கு அவரது கணவர் உறுதுணையாக இருக்க தைரியமாக அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். மத்திய அரசு நிறுவனமான தஞ்சாவூரில்செயல்படும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அங்கு பெற்ற வழிகாட்டுதலின் படி , கேழ்வரகு, சோளம், வரகு போன்ற சிறு தானியங்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் முறைகளை கற்றார்.

இதையும் படிக்க : அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 25 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தனது உணவு தயாரிப்பு தொழிலை தொடங்கினார். மேலும் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ், ரூ.50 லட்சம் கடன் பெற்று நவீன இயந்திரங்களுடன் ஒரத்த நாட்டில் தொழிற்சாலை அமைத்தார். தற்போது அவரது நிறுவனத்தில் 15க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞற்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

தொடக்கத்தில் தனது பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சவாலை எதிர்கொண்டார். அவரது பொருட்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் இவரது பொருட்களை நிராகரிக்க தொடங்கினர். இந்த நிலையில் கடைகளாக ஏறி இறங்கி தங்களது பொருட்கள் குறித்து விளக்கினார். காலப்போக்கில் அவர்களது விடாமுயற்சி பலனளித்தது. அவர்களது பொருட்கள் மெல்ல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது.

இதையும் படிக்க : மாதம் ரூ.6,500 சம்பளம்… இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!

தற்போது இவர்களது நிறுவனத்தில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றனர். உணவுத்துறையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத கோகிலா, தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் சிறந்த தொழில்முனைவோராக மாறி வாழ்க்கையில் வெற்றிபெற்றிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.