“65,00,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம்”… 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள பீகார் துணை முதல்வர்… நோட்டீஸ் அனுப்பியது இந்திய தேர்தல் ஆணையம்..!!!
SeithiSolai Tamil August 11, 2025 11:48 PM

பிகார் துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹா, இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், லக்கிசாராய் மற்றும் பங்கிபூர் என இரண்டு இடங்களில் விஜய்குமார் சின்ஹாவின் பெயர் இருப்பதாக பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எக்ஸ்-இல் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி, ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்த விவகாரம் குறித்த விளக்கத்தை அளிக்குமாறு விஜய்குமார் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரே நபருக்கு இரண்டு வாக்காளர் அட்டைகள் இருப்பது சட்ட ரீதியாகக் குற்றமாகும் என்பதால், இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ், “சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற பிறகும் விஜய்குமார் சின்ஹாவின் பெயர் நீக்கப்படாததற்கு தேர்தல் ஆணையமா, துணை முதல்வரா பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “விஜய்குமார் சின்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது நடவடிக்கை எதிர்க்கட்சியினர்மீது மட்டுமா எடுக்கப்படும்?” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.