மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர்சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மகளிர் பெருவிழா மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை மேற்கோள் காட்டி, “தந்தையை மிஞ்சும் மகன் இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்” எனக் கூறி, தனது மகன் அன்புமணியை மறைமுகமாக சாடினார்.
தமிழகத்தில் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக வலுவான போராட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். “எனது நண்பர் கலைஞர் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கி வரலாற்றில் இடம் பெற்றார். அதேபோல், 10.5% இடஒதுக்கீடு வழங்கி முதல்வர் ஸ்டாலினும் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 17ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், “கட்சியில் நான் சொல்வதே நடக்கும்; பிறர் கூறுவதை கேட்க வேண்டாம்” என்றும் தெளிவுபடுத்தினார்.
வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவை தனது மூத்த பிள்ளையாகப் பார்த்ததாகவும், “எனது மூத்த பிள்ளை குரு உயிரோடு இருந்திருந்தால் இந்த மாநாட்டை எவ்வளவு பிரமாண்டமாக நடத்தியிருப்பாரோ, அதேபோல் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளனர்” என பாராட்டினார். காடுவெட்டி குருவின் பெயரை அவர் கூறியவுடன், மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கோஷம் எழுப்பி அதிர வைத்தனர்.