தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவ படுகொலைக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கி பேசிய திருமாவளவன் கூறியதாவது, ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக ஏற்ற வேண்டும். அந்த சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தால் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக அவர் பரிணாமம் பெறுவார்.
மேலும் பல மாநிலங்களுக்கு வழிகாட்டிய முன்மாதிரி அரசு நடத்தியதாக வரலாற்றில் பதிவாகும். சமீபத்தில் நடந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் அவரது தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவ படுகொலைகளுக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும், புதிய கட்சிகளும் வாயை திறக்கவில்லை. விஜயால் இந்த ஆணவ படுகொலை குறித்து பேசக்கூட முடியவில்லை.
மேலும் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் ஆணவ படுகொலையை கண்டிக்க முடியவில்லை. ஆனால் அவர்களது வாக்குகள் மட்டும் அதிமுகவினருக்கு தேவைப்படுகிறது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது தேசிய க் கட்சிகளால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் துணிச்சல் இன்றைய தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலினுக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என பேசினார்.