சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 10,000 காவலர்கள் அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார்கள். சென்னையை பொருத்தவரையில் எழும்பூர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள்.கோயம்பேடு கிளம்பாக்கம் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் போன்ற இடங்களிலும் வணிக வளாகங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் துணை கமிஷனர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டுமென கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் கொடியேற்றும் கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் திரவப் பொருட்கள் ஊறுகாய் ஜாம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் மற்றும் கோட்டை ஆகிய இடங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.