தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுகிறது.
ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் நடைபெறும் இந்த தூய்மைப்பணியை தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.மேலும் இந்த போராட்டமானது மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியதாவது , “இந்த ஒப்பந்தப்பணியினால், இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் 2 ஆயிரத்து 42 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தது .
அப்போது இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “மனுதாரர் தரப்பில், “சுமார் 2 ஆயிரம் பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகவும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, “மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும்.என்று கூறினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்றுவிசாரிப்பதாக கூறினர்.