`தப்பித் தவறிக்கூட திமுக-காரன் வீட்டுக்கு போய்டாதீங்க; கிட்னி திருடு போயிரும்'- இபிஎஸ் விமர்சனம்!
Vikatan August 16, 2025 04:48 PM

"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்! " என்ற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரை! "

"அதிமுக சாதனைகள்- புகழாரம்! "

கூட்டத்தை பார்த்தவுடன்"இப்பவே வெற்றி நிச்சயம்" என நம்பிக்கை தெரிவித்த இபிஎஸ், அதிமுக ஆட்சியில் தான் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து 400 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட உருவாக்கப்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்புகள் அமைத்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் திறப்பு விழாவில் மட்டும் புகழாரத்தை திமுக பெற்றுக் கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

"ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு குறைபாடு"

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாடு சொத்து வரியில் 150 கோடி ஊழல் குறித்து, "அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும், என நான் கூறியதைக் கண்டு பயந்து தான் திராவிட மாடல் அரசு குற்றவாளிகளை கைது செய்தனர் " என மேயர் கணவர் கைது நிகழ்வைப் பற்றி பேசினார்.

"பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்கள்"

திமுக ஆட்சியில் ஊழல் தான் நடக்கிறது. சென்னை மாநகராட்சியில் கழிப்பறை சுத்தம் செய்ய ஒரு நாளைக்கு 800 ரூபாய் என கழிப்பறை கழுவுவதில் கூட ஊழல் நடத்துகிறது இந்த அரசாங்கம். அதோடு, இந்த ஆட்சியில் 1000 கோடி ஊழல் நடந்ததைப் பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள் காட்டினார்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தியதன் மூலம் ஒரு நாளைக்கு 15 கோடியும் மாதத்திற்கு 450 கோடியும் வருடத்திற்கு 5400 கோடி லாபம் என்றும், சென்னை மத்திய அரசில் ஆயிரம் கோடி முறைகேடு நடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதோடு, அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இலவச மடிக்கணினி மற்றும் 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது என இபிஎஸ் புகழாரம்!

"உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அரசு"

ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரின் மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு திருட்டை சுட்டிக்காட்டி, "தப்பி தவறி கூட திமுக காரன் வீட்டுக்கு போய்டாதீங்க, கிட்னி திருடு போயிரும்" என கடுமையாக விமர்சித்தார்.

"அதோடு திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள், ஏன்.... பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை" எனவும் அதற்காக சமீபத்தில் சேலம் ஆத்தூரில் நடந்த ஆசிட் வீசி நகை பறித்த சம்பவங்களை மேற்கோள்காட்டினார்.

"மக்களுக்கான ஆட்சி- அதிமுக !"

அதிமுக தான் மக்களுக்கான ஆட்சி, திமுக குடும்பத்திற்கான ஆட்சி எனவும் குறிப்பிட்டார் .அதோடு அதிமுக கட்சியில் எளிய சாமானிய தொண்டனும் தலைவன் ஆகலாம். ஆனால், திமுக வில் மன்னர் ஆட்சி தான் நடக்கிறது என்றார். கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது அதிமுக ஆட்சியில் தான். ஆனால் திமுக ஆட்சியிலோ, பல அரசு பள்ளிகள் மூடல் தான் நடைபெற்று வருகிறது என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.