10 வீரர்கள் பங்கேற்றுள்ள கிராண்ட் செஸ் டூர் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகின்றது. ரேபிட் மற்றும் பிளிட்ஸ் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகின்ற போட்டிகளில், ரேபிட் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் 10 புள்ளிகள் பெற்றிருந்தார்.
உலக சாம்பியனான குகேஷ் பிளிட்ஸ் செஸ் பிரிவில் மோசமான தோல்விகளால் 06-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தொடர்ந்து நடந்த பிளிட்ஸ் பிரிவு போட்டிகளில் குகேஷ் 04 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளார்.
04 போட்டிகளில் டிரா செய்த அவர், ஒரு போட்டியில் மட்டும் அமெரிக்க வீரர் லெய்னியர் டோமின்கெஸை வென்றுள்ளார். பிளிட்ஸ் போட்டிகளில் 03 புள்ளிகளை மட்டுமே பெற்ற குகேஷ் ஒட்டு மொத்தமாக 13 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளார். இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில், குகேஷ் 06-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் ஆரோனியன் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனா 17 புள்ளிகளுடன் 02 ஆம் இடத்திலும், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்ஸிமே வஷியர் லாக்ரே 16.5 புள்ளிகளுடன் 03-ஆம் இடத்திலும் உள்ளனர். பிலிப்பைன்ஸ் அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோ தலா 15 புள்ளிகளுடன் 04 மற்றும் 05-வது இடங்களை பெற்றுள்ளனர்.