79-வது சுதந்திர தினம்: `விருதுகள், 9 புதிய அறிவிப்புகள்; சாதனைகள்' - ஸ்டாலின் உரை ஹைலைட்ஸ்
Vikatan August 16, 2025 04:48 PM
பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு!

"ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைக் களைந்திட ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு! இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன். மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்!"

அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது!

"ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை. பல மாநிலங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல மதங்களைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கிய துணைக்கண்டம்தான் இந்தியா. அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, நாம் பீடுநடை போட, அனைவரும் இந்தியராய் ஒருங்கிணைந்து செயல்படக் காரணம், நமது அரசியலமைப்புச் சட்டம்! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த இந்த வரலாற்றுச் சாசனத்தில், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து மக்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளில், நமது அரசியல் களம் கண்ட மாற்றங்களால், இந்த அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையையும் நாம் காண்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட, மக்களுக்கு அருகில் இருந்து செயல்படும் மாநில அரசுகளுக்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படும் சூழலில், இதற்கு நேர்மாறாக கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன."

14 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி!

"14 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து, மாபெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது சொல்லியிருந்த 9.69 விழுக்காட்டைவிட இது கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு அதிகம்!

இந்தியாவிலேயே மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத மாபெரும் வளர்ச்சி! ஏன், நாட்டினுடைய வளர்ச்சியே 6.5 விழுக்காடுதான். ஆனால், தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது!"

முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்!

முதல்வர் ஸ்டாலின் தனது முழு உரையில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாய் விளங்கும் தியாகிகளை போற்றி, அவர்களது உன்னத நோக்கங்கள் நிறைவேற நாளும் உழைக்க உறுதி எடுத்துக்கொள்வோம். இந்நாளில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான ஜனநாயக உரிமையை 1974-ம் ஆண்டு இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். திராவிட மாடல் ஆட்சியில், ஐந்தாவது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றமைக்குப் பெருமை அடைகிறேன்.

தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை நாள் பற்றிச் சொல்லும்போது, `1947 ஆகஸ்டு 15-ஆம் நாள், நாம் ஆங்கிலேயரின் கணக்கைத் தீர்த்த நாள்! அதன்பின் ஒவ்வொரு ஆண்டிலும், வரும் சுதந்திரத் திருநாள், நாட்டிற்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் நாம் ஆற்றியுள்ள பணிகளைக் கணக்குப் பார்க்கும் நாள்' என்றார்."

தகைசால் தமிழர் விருது - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் டாக்டர் APJ அப்துல்கலாம் விருது - முனைவர் வ. நாராயணன் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது - துளசிமதி முருகேசன் 9) ரூ.15 கோடியில் 10,000 மாணவர்களுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி ! 8) ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும். 7) மலைப்பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் விரிவு ! 6) ரூ.22 கோடியில் முன்னாள் படை வீரர்களுக்கு தங்கும் விடுதி ! 5) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி உயர்வு! 4) முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி உயர்வு! 3) விடுதலைப் போராட்ட வீரர்கள் வழித்தோன்றல்களின் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் உயர்வு ! 2) விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் உயர்வு! சுதந்திர தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்!

1) மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு!

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து உரையாற்றினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.