2026ம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறோம். திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது - எல்.முருகன்!
Top Tamil News August 18, 2025 05:48 PM

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறி மாறி பேசி வருவது அவர் நிலையாக இல்லை என்பதையே காட்டுகிறது. தூய்மைப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்களாகவே வைத்திருக்காமல், அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துக் கொண்டு இருக்கிறார். பட்டியலின மக்கள் நலனில் திருமாவளவனுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. பட்டியலின மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், கடந்த 5 ஆண்டுகளில் திருமாவளவன் என்ன செய்திருக்கிறார்? அவர்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. அவருக்கு திமுக கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த கூட்டணியில் இருந்து எம்பி, எம்எல்ஏ-க்களாக வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். பட்டியலின மக்களுக்காக எல்லோரும் குரல் கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பதால், திருமாவளவனிடம் கேள்வி கேட்கிறோம்.

அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம். 2026ஆம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறோம். திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் அது உங்கள் அனைவருக்கும் தெரியும். திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள். அவர்கள் யாரென்று சொல்ல முடியாது. கமலாலயத்தில் வந்து இணையும் போது, உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். நிச்சயமாக திமுகவின் மிகப்பெரிய தலைவர்கள் எங்களுடன் வந்து இணைவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.