எஸ்.ஐ தேர்வில் இனி காவல்துறையில் இட ஒதுக்கீடு கிடையாது: தமிழக அரசு அரசாணை..!
Seithipunal Tamil August 20, 2025 02:48 PM

தமிழகத்தில் எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது என்றும், அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  கடந்த மே 04-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில், வழக்கமாக காவல் துறையில் 02-ஆம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவதோடு, மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது.

குறித்த தேர்வுகளில் காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் - ஒழுங்கு, உளவியல் தொடர்புடைய கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் ஏற்கெனவே உடல் தகுதியை நிரூபித்து காவல் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால் உடல் தகுதி தேர்வு கிடையாது. ஆனால், பொதுப் பிரிவில் வருபவர்களுக்கு கூடுதலாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அத்துடன், அவர்களுக்கு சட்டம் தொடர்பான கேள்விகள் இருக்காது.

மேலும், பொதுப்பிரிவு மற்றும் பணியில் உள்ள போலீஸாருக்கு தனித்தனி தேர்வு மற்றும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்படுவதோடு, அதில் தேர்வானவர்களுக்கு எஸ்.ஐ பயிற்சி வழங்கப்படும். அவர்கள்  பயிற்சிக் காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும். ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் அனைவரும் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெறுவார்கள்.

இதுவரை இப்படி நடந்து வந்த நிலையில்,  அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக, பிரபல நாளிதழில் செய்தி வெளியான நிலையில், பழைய நடைமுறைப்படி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக டிஜிபியின் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 20 சதவீதம் காவல்துறை பணியாளர்கள், 80 சதவீதம் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஸ்ஐ தேர்வுக்கான புதிய பொதுவான தேர்வு நடைமுறையை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுதவிர, இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி, தமிழ் மொழித் தேர்வு, பொதுத்தேர்வு, பொது அறிவு தேர்வு ஆகியவையும், உயரம், மார்பளவு, ஓட்டப்பயிற்சி, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்டவற்றில் ஆண், பெண் என இருதரப்பினரும் தேர்வு செய்யப்படும் முறை ஆகிய அனைத்து விவரங்களையும் அரசாணையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் தேர்வானது இனிவரும் காலங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வாக இருக்கும் என்றும், அதாவது காவலர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு இருக்காது என தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.