உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் நடைபெற்ற ஒரு பயங்கர சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பட்டாவால் முகத்தை மூடிய ஒரு பெண் வயலில் தரையில் விழுந்திருந்த ஒரு ஆணின் முகத்தில் கால் வைத்து, கட்டையால் அடிக்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பரவி வருகிறது. அந்த பெண் ஜோதி என்றும், தாக்கப்பட்டவர் அமித் ஆர்யா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் மற்ற ஆண்களும் அந்த இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பின்னர், அந்த இளைஞரின் ஆடைகளையும் கழற்றி மானப் பார்வையுடன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் தெரிய வந்ததாவது, ஜோதி மற்றும் அமித் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக மாறியிருக்கின்றனர். ஜோதி மீரட்டில் இருந்து அமித்தை பிஜ்னோருக்கு அழைத்துள்ளார். அங்கு ஜோதி மற்றும் அவரது நான்கு நண்பர்கள் சேர்ந்து அமித்தை தாக்கியுள்ளனர்.
“>
அமித், ஹிட்டாச்சி நிறுவனத்தில் கேஷ் வேன் டிரைவராக பணிபுரிகிறார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி, வேலைக்கு அரை நாள் விடுப்பு எடுத்த அமித், அன்றிரவு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இரண்டு நாட்கள் தேடியும் இவர் கிடைக்காமல் போனதால், ஜூலை 13 அன்று அவரது உறவினர் அனுராக், காவல்துறையில் புகார் பதிவு செய்தார்.
இந்நிலையில், ஜூலை 26 அன்று, மீரட் போலீசார் ஜோதி, சச்சின், சோட்டு ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அனுராக் தாக்கல் செய்துள்ள எஃப்.ஐ.ஆர்-இல் இந்த மூவருடன் மேலும் அடையாளம் தெரியாத நான்கு பேர் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அமித் காணாமல் போனது 39 நாட்களாகி விட்ட நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்தும் அதிர்ச்சி மற்றும் கவலை நிலவுகிறது.
போலீசார் இதனை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டு, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, பல கோணங்களில் விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்துள்ளனர்.