5வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..!!
Top Tamil News August 20, 2025 03:48 PM


நாப்பாண்டு 5 வது முறையாக மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.  

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.  இதனால் இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகின்றன.   1 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.  இதனால் ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி ஆற்றில் இரங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 1.16 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.  தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு 5வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.  அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக  கரையோர மக்களுக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.