Asia Cup 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!
TV9 Tamil News August 20, 2025 03:48 PM

2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான (2025 Asia Cup) 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் உள்ள பிசிசிஐ (BCCI) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 19ம் தேதி அறிவிக்கப்பட்டது. அணியை அறிவிப்பதற்காக தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன் போது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு சம்பவம் நடந்தது. ஊடகங்களுடனான உரையாடலின் போது, ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த கேள்விகள் எழுந்தது. அப்போது, பிசிசிஐ ஊடக மேலாளர் தலையிட்டால் செய்தியாளர்கள் சந்திப்பு உடனடியாக நிறுத்தப்பட்டன.

ஆசிய கோப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன நடந்தது?

2025 ஆசிய கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாயில் மோதுகின்றன. மேலும் முடிவுகளைப் பொறுத்து, சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டியிலும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒரு போட்டியும் நடைபெறலாம். கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

ALSO READ: சூர்யகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறக்கூடாது என பொதுமக்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, பிசிசிஐ ஊடக மேலாளர் உடனடியாக தலையிட்டு அஜித் அகர்கருக்கு பதில் அளிக்கவிடாமல் தடுத்தார். அதாவது செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர், “இந்த ஆசிய கோப்பையைப் பார்க்கும்போது, 14 ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, அந்த போட்டியை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்?” என்று கேட்டார். இதன் போது, பிசிசிஐ ஊடக மேலாளர் குறுக்கிட்டு கேள்வியை நிறுத்திவிட்டு, அடுத்த கேள்விக்குச் செல்வதற்கு முன், ”பொறு, ஒரு நிமிடம். அணித் தேர்வு குறித்து ஏதேனும் கேள்வி இருந்தால், நீங்கள் கேட்கலாம்” என்றார். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ALSO READ: மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!

முன்னாள் வீரர்கள் கருத்து:

முன்னாள் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் போன்றோர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க அறிவுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக விளையாடிய ஹர்பஜன், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்துவிட்டார். அதே நேரத்தில், இந்த போட்டியில் இந்தியா விளையாடக்கூடாது என்றும் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.