குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
Top Tamil News August 20, 2025 03:48 PM

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும்கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமணு தாக்கல் செய்கிறார்.  

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த  ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது  துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ளது.  இதனையடுத்து  குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. நேற்று முன்தினம் டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

தொடர்ந்து  நேற்று என்.டி.ஏ கூட்டாணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, சி.பி.ராதாகிருஷ்ணனை  தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களுக்கு அறிமுகம்  செய்துவைத்தார்.  குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஆக.21) முடிவடையவுள்ள நிலையில்,  இன்று (ஆக.20) அவர் வேட்புமணு தாக்கல் செய்ய உள்ளார்.  இதில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.