திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, புதிய ரேஷன் கார்டு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
அந்த வகையில் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது மகன் நேதாஜியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, என்னையும் எனது மனைவியையும் நேதாஜி தான் கவனித்து வந்தார்.
கடந்த மாதம் பக்கத்து வீட்டு வசிக்கும் தங்கராஜின் மனைவி சாந்தியிடம் வீட்டு வேலை சம்பந்தமாக பொருள் ஒன்றை நேதாஜி கேட்டு வாங்கினார். இதனால் எங்களது மகனுக்கும் தங்கராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி தங்கராஜ் அவரது கூட்டாளிகளும் இணைந்து வீட்டிற்குள் புகுந்து எங்கள் மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நேதாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்.
எனவே மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.