கூட்டணியில் புதிய கட்சிகள்? முதல்வருடன் முக்கிய மீட்டிங் நடத்திய கூட்டணி தலைவர்கள்.. என்ன மேட்டர்?
TV9 Tamil News August 20, 2025 03:48 PM

சென்னை, ஆகஸ்ட் 20 : சென்னையில் முதல்வர் ஸ்டாலினை (CM MK Stalin) கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் ஸ்டாலினின் திருமண நாளையொட்டி, திமுககூட்டணி (DMK Alliance) கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election) இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சியனர் தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் ஏற்கனவே உள்ள பாமக, தேமுதிக, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோரின் நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை தனித்தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த சந்திப்பின் மூலம், திமுக கூட்டணியில் தேமுதிக, ஓபிஎஸ் சேர்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். மேலும், அதிமுகவில் இருந்து பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். புதிய கட்சிகளை தன் பக்கம் இழுக்க முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் திமுக கூட்டணி உடையும் என கூறி வருகிறார்.

Also Read : கட்சியில் சேர்ந்த ஒரே வாரம்… அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.. திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

இப்படியான சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் 10 கட்சிகளின் தலைவர்களும் 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியான நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் சந்திப்பு

உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️

இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!@SPK_TNCC @thirumaofficial… pic.twitter.com/3SnpVkKgaS

— M.K.Stalin (@mkstalin)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க நிறுவனர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் ப.சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமுமுக தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ம.ம.க தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கே.எம்.டி.கே தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

Also Read :’நான் மானஸ்தன்’ அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உடனிருந்தனர். திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பாமக மற்றும் தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.