நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த நாய் கடித்து ஏழை தொழிலாளி பலி.. அலட்சியத்தால் பறிபோன உயிர்..!
WEBDUNIA TAMIL August 20, 2025 03:48 PM

சென்னையின் ஜாஃபர்கான்பேட்டை பகுதியில், நடைப்பயிற்சிக்காக அழைத்து வரப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில், சமையல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஃபர்கான்பேட்டை VSM கார்டன் பகுதியில் வசித்து வந்த கருணாகரன் என்ற சமையல் தொழிலாளி, தனது நண்பருடன் வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர், தனது வெளிநாட்டு வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, நாய் திடீரென கருணாகரன் மீது பாய்ந்து, அவரது தொடை மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையாக கடித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கருணாகரன் பலத்த காயமடைந்தார். நாயை கட்டுப்படுத்த முயன்ற பூங்கொடி என்பவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கருணாகரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அலட்சியத்தால் பரிதாபமாக பலியான ஒரு உயிர் குறித்த இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.