தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி!
Top Tamil News August 20, 2025 03:48 PM

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி கூறியதாவது:-

இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். எனவேதான், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளன. இந்துத்துவ பின்னணி, ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை அவர்கள் (பாஜக) குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் நாங்கள் அதை எதிர்க்கிறோம். நாட்டில் பிளவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. எனவேதான், அதற்கு பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பின் மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய, நாட்டு மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒருவரை நாங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு போதிய அளவு பலம் உள்ளதா என கேட்கிறீர்கள். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவராயிற்றே என கேட்கிறீர்கள். இந்த தேர்தல், தமிழருக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பதா என்பது பற்றியது அல்ல. இது ஒரு சித்தாந்த மோதல். எனவே, அதற்கும் மேலானது இது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதாலேயே பாஜகவுக்கு தமிழ்நாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது, தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீது, தமிழக மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தமாகிவிடாது.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை அவர்கள் இன்னமும் வழங்கவில்லை. இந்தி மொழியை திணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்கள் வரலாற்றையும் மாற்றி எழுத முயல்கிறார்கள். தமிழக மக்கள் மீது அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது? எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.