சென்னை மாவட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பர்தா அணிந்த நபர் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரியவந்தது.
அவர் கொண்டு வந்த பையில் இரண்டு கொடுவாள், ஒரு கத்தி இருந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கரணின் தந்தை உத்தம் சந்த் உயிரிழந்தார். தாய் சாந்தி தேவி மாற்றுத்திறனாளி. கரண் மேத்தாவின் சகோதரிக்கு திருமணம் ஆகி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
இவர்களது நெருங்கிய உறவினர் ஒருவர் தான் கரண் மேத்தாவின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து வந்தார். பிரபல தனியார் நிறுவனத்தில் மாதம் 72 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் கரண் மேத்தா ஷேர் மார்க்கெட் முதலீடு, ஆன்லைன் சூதாட்டம் என 24 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்து விட்டார்.
10 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி மாதம் வரும் இஎம்ஐ செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முயன்ற கரண் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது தோழியை பார்த்து பேசி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார். இதற்காக வீட்டில் இருந்து கத்தியையும் கொடுவாள்களையும் எடுத்து பர்தா அணிந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த போது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.
தோழியை பார்த்துவிட்டு மறைவான இடத்திற்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்ததாக கூறியுள்ளார். அவரை போலீசார் நீதிமன்ற தலைமை நீதிபதி பாண்டியன் அவர் கரணுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி உறவினர் ஒருவருடன் நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பித்தார். அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.