நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலமாக பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'மாற்றம்' என்கிற புதிய அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலமாகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
லாரன்ஸைப் போலவே KPY பாலாவும் தொடர்ந்து சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.
பாலாவின் இந்தச் செயல்பாடுகள் ராகவா லாரன்ஸுக்கு தெரியவந்ததும், அவரைப் பாராட்டியும் இருந்தார்.
தற்போது, 'மாற்றம்' அறக்கட்டளை மூலமாக ராகவா லாரன்ஸும் பாலாவும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு கழிப்பிடத்தைக் கட்டிக் கொடுத்து, அதை நேற்று திறந்து வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லாரன்ஸ், "கழிப்பிட வசதிகளால் மாணவர்கள் பயனடைவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால், கட்டிடத்தின் திறப்பு விழா செயல்முறையில் நான் வருத்தமடைந்தேன். இதைப் பற்றி விரைவில் ஒரு வீடியோவில் பேசுகிறேன்.
KPY பாலா என்னிடம் ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு சரியான கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இல்லாத பிரச்னையைப் பகிர்ந்தார். அதைச் சொல்லி அவர் 2 லட்சம் ரூபாய் உதவி கோரினார்.
ஆனால், இந்தப் பிரச்னையால் குழந்தைகள் பல தொற்று நோய்களை எதிர்கொள்கின்றனர் என்பதை அறிந்தபோது, நான் மனமுடைந்து போனேன்.
நான் 15 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி, அவர்களுக்கு சரியான கழிப்பறை வசதிகளை உருவாக்க உதவ முடிவு செய்தேன். இந்தப் பங்களிப்புடன், KPY பாலா மற்றும் அந்தப் பள்ளியின் பழைய மாணவர்களின் ஆதரவுடன், இந்தத் தேவையான வசதிகளை உருவாக்கினோம்.
பாலாவுக்கும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.