மதிமுகவில் வைகோவிற்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவில் உட்கட்சி மோதல் சில நாட்களுக்கு முன் வெடித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவிற்கும் இடையே சண்டை மூண்டது. வைகோவின் மகனான துரை வைகோ, 2019 முதல் மதிமுகவில் முதன்மைச் செயலாளராக முக்கிய பொறுப்பு வகிக்கத் தொடங்கியதால், வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என மல்லை சத்யா தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இந்நிலையில் மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளின் படி, ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கலாம். கட்சியின் உடமைகள், கணக்குகள் அனைத்தையும் மல்லை சத்யா பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.