தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வெற்றிகரமான இயக்குநராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மூலம் அறிமுகமான இவர், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் ஹிட் படங்களை வழங்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில், ரஜினி உடன் சோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து வணிக ரீதியாக பெரிய வெற்றி கண்டது. இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடி சம்பளம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கைதி 2 உருவாகிறது. எல்சியூ தொடரின் முக்கிய படமாக கருதப்படும் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் கசிந்த தகவல்களின் படி, கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை ரூ.50 கோடியில் இருந்து ரூ.75 கோடியாக உயர்த்தியுள்ளார். இதன்மூலம், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக அவர் திகழவிருக்கிறார்.
மொத்தமாக ரூ.190 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில், லோகேஷுக்கு ரூ.75 கோடி, நடிகர் கார்த்திக்கு ரூ.25 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை பிற நடிகர்களின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக சவால்களை எதிர்கொண்ட நிலையில், கைதி 2 மூலம் லோகேஷ் கனகராஜ் தனது திறமையை மீண்டும் நிரூபித்து, மாபெரும் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.